

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களில் புதியவர்களை மட்டுமே அழைத்து கட்சித் தலைமை நேர்காணல் நடத்தியுள்ளது. இதனால், அதிமுகவில் சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டு, புதியவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையறிந்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். தேர்தலை சந்தித்த அனுபவமே இல்லாத புதியவர்களுடன் மோதும் நிலை ஏற்பட்டால், அது தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்திருந்தது. அப்போது ஈழ பிரச்சினை, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த இரு கட்சிகள் கடும் எதிர்ப்பை சந்தித்தன. அத்தகைய சூழ்நிலையிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு தொகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளைக் கைப்பற்றியது.
அதன் பின் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸும் தனித்தனியாக களம் கண்டன. இதில் பாஜக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப்பின் குமரி மாவட்டத்தில் திமுக அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
புதியவர்களுக்கு நேர்காணல்
அதிமுக எந்தவொரு பலமான கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்கிறது. எனினும், கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நலப்பணிகள், மக்களை சென்றடைந்துள்ள இலவச திட்டங்கள் போன்றவற்றால் தங்களுக்கு ஆதரவு பெருகியுள்ளதாக அதிமுகவினர் கருதுகின்றனர்.
அதிமுக கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குமரி மாவட்டத்தில், மாற்றுக் கட்சியில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக சார்பில் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலுக்கு கட்சியின் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், இப்போது கட்சிப் பணிகளில் தீவிரமாக இருப்பவர்கள் என யாரும் அழைக்கப்படவில்லை. யாருமே எதிர்பார்க்காத வகையில் புதியவர்கள் பலர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எதிர்க்கட்சியினர் மகிழ்ச்சி
இது அதிமுகவில் உள்ள சீனியர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், எதிர்க்கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. போதிய முன் அனுபவம் இல்லாதவரும், பிரபலமில்லாத நபரும் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டால், அதையே சாதமாக்கி தாங்கள் வெற்றிபெற்றுவிடலாம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
அதிமுகவின் கனவு
அதே நேரத்தில், இதுபோன்று புதியவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படும்போது, அவர்கள் மீது பெரிய அளவில் குற்றச்சாட்டோ, அதிருப்தியோ இருக்காது. அந்த தொகுதியில் ஜெயலலிதாவே நிற்பதாகத்தான் வாக்காளர்கள் மனதில் பிம்பம் உருவாகும். அதுவே தொகுதிக்குள் சாதகமான விளைவை ஏற்படுத்தி வெற்றிபெற வைக்கும் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.
திமுகவின் நம்பிக்கை கைகொடுக்குமா? அல்லது அதிமுகவின் கனவு பலிக்குமா? என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.