

இலவச கறவைப்பசுக்கள் வழங்கும் திட்ட செயலாக்கத்தில் ஏற்பட்டுள்ள பலவகை இடர்பாடுகளை சரிசெய்யும் பொருட்டு இலவச கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கால்நடை பராமரிப்பு (ம) மருத்துவ பணிகள் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார், கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தின் கால்நடைகள் நலம் பேணுவதை ஒரு உயரிய பணியாகக் கருதி அதற்கென திட்டங்களை வடிவமைத்து அதன் பயனாக கடந்த 2000 - 2001 ம் ஆண்டு முதல் "கால்நடை பாதுகாப்புத் திட்டம்" மற்றும் இதர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கால்நடைகளின் நலன், பாதுகாக்கப்பட்டு. விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற துறை செயல்பட்டு வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இலவச கறவைப்பசுக்கள் வழங்கும் திட்ட செயலாக்கத்தில் ஏற்பட்டுள்ள பலவகை இடர்பாடுகளை சரிசெய்யும் பொருட்டு இலவச கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நன்றாகத் திட்டமிடப்பட்டு, முறையான மற்றும் தகுதியான பயனாளிகளுக்கு கால்நடைகள் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், கணவனை இழந்த மகளிர்/ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட மகளிர் ஆகியோருக்குத் தொடர் வாழ்வாதாரம் வழங்கும் வகையில், ஊராட்சி, ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் பயனாளிக்கு தலா ஐந்து ஆடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தர விட்டுள்ளார்கள். சென்ற ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் செவ்வனே மாற்றி அமைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் .
சேலம் மாவட்டத்தில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான உயர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து இப்பணிகள் தொய்வின்றி நடப்பதை உறுதி செய்யவும், விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் பலன் அளிக்கும் வகையில் இந்நிலையத்தின் செயல்பாடுகளை வரையறுக்க மாண்புமிகு தமிழக முதல்வர் உத்தர விட்டுள்ளார்கள்.
இத்திட்டப்பணிகளை துரிதப்படுத்தும் வகையில் அரசு உயர் அதிகாரிகள், தொழில் நுட்ப வல்லுனர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையத்தின் முன்னேற்றப் பணிகளை கண்காணித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, திட்ட செயலாக்கப் பணிகள் முடுக்கி விடப்பட்டு பணிகள் முழுவீச்சில் விரைவாக நடைபெற்று வருகின்றன.
கால்நடைகளைத் தாக்கி விவசாயிகளுக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கால் மற்றும் வாய்கோமாரி நோய்க்கான தடுப்பூசி மருந்து ஒன்றிய அரசின் மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை, கால்நடைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி மருந்து கடந்த பிப்ரவரி 2020 க்கு பின்னர் வழங்கப் படவில்லை. தற்போது தேவைப்படும் 95 இலட்சம் டோஸ்கள் தடுப்பு மருந்து ஒன்றிய அரசால் வழங்கப்படாத நிலையில் தமிழக முதல்வர் கொடுத்த அழுத்தத்தின் பயனாக 28.75 இலட்சம்டோஸ் தடுப்பு மருந்து பெறப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் ஈரோடு, தஞ்சாவூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, மதுரை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்திற்கு தர வேண்டிய மீதமுள்ள தடுப்பூசி மருந்துகள் ஒன்றிய அரசிடம் இருந்து விரைந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
கால்நடைப் பராமரிப்புத் துறையில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடைபராமரிப்பு உதவியாளர்கள், போன்ற பல்வேறு பதவிகள் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிரப்பப்படாமல் உள்ள காரணத்தால் களப்பணிகளை மிகுந்த சிரமத்துடன் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது.
முதல்வரின் ஆலோசனை மற்றும் அரசு உத்தரவினை பெற்று காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் துறையிலுள்ள அனைத்து காலிப்பணிடங்களும் நிரப்பப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.