பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: கோவை மாநகர காவல்துறையின் புதிய ஆணையர் உறுதி 

கோவை மாநகர காவல் ஆணையராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட பிரதீப் குமார்.   படம் : ஜெ.மனோகரன்.
கோவை மாநகர காவல் ஆணையராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட பிரதீப் குமார். படம் : ஜெ.மனோகரன்.
Updated on
2 min read

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படும் என, கோவை மாநகர காவல்துறையின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த தீபக் எம்.தாமோர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக பணியிடம் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையில் கூடுதல் ஆணையராக (போக்குவரத்து) பணியாற்றி வந்த பிரதீப் குமார் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இவர், கோவை மாநகர காவல் ஆணையராக இன்று (20-ம் தேதி) மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவருக்கு, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

அதை ஏற்றுக் கொண்ட ஆணையர் பிரதீப் குமார், ஆவணத்தில் கையெழுத்திட்டு, கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பிரதீப் குமார் கூறும்போது,‘‘ தமிழகத்தில் உள்ள முக்கிய மாநகரங்களில் கோவை முதன்மையானது. மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படும். நிலுவையில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எடுத்துச் செல்லப்படும்.

சாலை விபத்துகளை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், விபத்துகளை குறைப்பது தொடர்பாகவும் வல்லுநர்களுடன் கலந்தாய்வு நடத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொருளாதார குற்றங்கள், வேலை வாங்கித் தருவதாக நடக்கும் பண மோசடிகள் போன்ற மோசடி சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், இதில் தொடர்புடையவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

முன்னதாக, காவல் ஆணையரை, துணை ஆணையர்கள் ஜெயச்சந்திரன், உமா, செந்தில்குமார், செல்வராஜ் உள்ளிட்டோரும், கூடுதல் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் உள்ளிட்டோரும் வரவேற்றனர். காவல் ஆணையர் பிரதீப்குமார், கடந்த 2003-ம் ஆண்டு பேட்ஜ் நேரடி ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பின்னர், சில ஆண்டுகள் சிபிஐ புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து மதுரை மற்றும் சேலம் சரக டிஐஜியாக பணியாற்றிய பிரதீப்குமார், பின்னர் ஐஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர், தற்போது கோவை மாநகர காவல் ஆணையராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in