Published : 20 Nov 2021 06:39 PM
Last Updated : 20 Nov 2021 06:39 PM

அம்மா மருந்தகங்கள் மூடலா?- ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்குத் தமிழக அரசு விளக்கம்

சென்னை

அம்மா மருந்தகங்கள் மூடப்படுவது குறித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுக்குத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''எதிர்க்கட்சித் தலைவரின் 20-11-2021 தேதியிட்ட அறிக்கையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களைத் தமிழக அரசு மூடி வருவதாக முற்றிலும் தவறான ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

கூட்டுறவு சங்கங்களின் மூலம் தமிழக அரசு 131 அம்மா மருந்தகங்கள், 174 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 305 மருந்தகங்களை நடத்தி வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்கெனவே இயங்கி வந்த அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை. மாறாக, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது. கடந்த ஆண்டு இயங்கிவந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126-லிருந்து 131 ஆக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மருந்தகங்கள் அனைத்தும் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருவதால், ஏழை எளிய மக்கள் பெருமளவில் பயன்பெற்று வருகின்றனர் என்பதனை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. அவ்வாறு உணர்ந்ததனாலேயே அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும் ஆண்டொன்றுக்கு 60 புதிய மருந்தகங்கள் என்கிற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களைப் புதிதாகத் தொடங்குவதற்கு கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நடப்பு வருடத்தில், நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிற எண்ணிக்கையைவிடக் கூடுதலாக 75 மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

131 அம்மா மருந்தகங்கள் மூலம் நடப்பு ஆண்டில் 31.10.2021 வரை ரூ.44.88 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது. அதேபோல 174 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.48.21 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் 305 அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.93.09 கோடிக்கு இந்த ஆண்டில் 31.10.2021 வரை வர்த்தகமாகியுள்ளது.

மேலும், அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மையப்படுத்திக் கொள்முதல் செய்வதன் மூலம் மருந்து மாத்திரைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் மேலும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பலன் பெறுவதற்கும் கூட்டுறவுத்துறை ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’’.

இவ்வாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x