

தமிழகத்திலேயே முதல் முறையாக, கரூர் மாவட்டத்தில் கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்குத் தங்கத் தந்தை விருது, ரூ.5,000 ஊக்கத்தொகை அல்லது அரசுத் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். நிகழ்வைத் தொடங்கிவைத்து தங்கத் தந்தை விருதையும் வழங்கினார்.
தமிழகத்திலேயே முன்மாதிரித் திட்டமாக கரூர் மாவட்டத்தில் கருத்தடை செய்துகொள்ள முன்வரும் ஆண்களை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கத் தந்தை திட்டத் தொடக்க விழா இன்று (நவ.20-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் திட்டத்தைத் தொடங்கிவைத்து கருத்தடை செய்துகொண்ட ஆண் ஒருவருக்கு தங்கத் தந்தை விருதை வழங்கினார்.
இதுகுறித்து கரூர் ஆட்சியர் த.பிரபுசங்கர் பேசியதாவது:
“கரு உருவாகும் ஊரிலிருந்து நலவாழ்வுத் திட்டம் தொடங்குகிறது. ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கருத்தடை செய்துகொள்வோருக்குத் தங்கத் தந்தை விருது வழங்கி கவுரவிக்கப்படுவதுடன் ரூ.5,000 ஊக்கத்தொகை அல்லது இலவச வீட்டுமனைப் பட்டா, வீட்டில் உள்ள முதியவர் ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை, விலையில்லாக் கறவை மாடு அல்லது வெள்ளாடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் இலவச கால்நடைக் கொட்டகை, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையதாரர் இல்லாமல் வங்கிக் கடன் உதவி, வேளாண்மைத் துறையின் மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும்.
தோட்டக்கலைத் துறை மூலமாக தென்னை, பல அடுக்குப் பயிர் திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.40,000 வரை மானியம் வழங்குதல், விவசாயிகளுக்கு சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.445 வீதம் 50 சதவீத மானியத்துடன் 1000 ச.மீ. அளவில் பசுமைக் குடில் திட்டத்தின் மூலம் பாலித்தீன் குடில் அமைத்துத் தருதல், சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.355 வீதம் 50 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக 4 சதுர மீட்டர் வரை நிழல் வலை கூடாரம் அமைக்க நிதி உதவி வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் உபகரணங்கள் இலவசமாக வழங்குதல் போன்ற ஏதேனும் ஒரு அரசுத் திட்டத்தில் முன்னுரிமையளித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்”.
இவ்வாறு ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இரா.முத்துச்செல்வன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.