வலையில் சிக்கிய அரியவகை தோணி ஆமையைப் படகிலிருந்து கடலில் விடும் மீனவர்கள்.
வலையில் சிக்கிய அரியவகை தோணி ஆமையைப் படகிலிருந்து கடலில் விடும் மீனவர்கள்.

4 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னார் வளைகுடா கடலில் தென்பட்ட அரியவகை தோணி ஆமை: வலையில் சிக்கியது

Published on

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடலில் 4 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட அரியவகை ’தோணி ஆமை’ மீனவர் வலையில் சிக்கியதால் மீண்டும் கடலில் விடப்பட்டது.

இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய இந்தியக் கடற்பகுதிகளில் பங்குனி ஆமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, ஓங்கில் ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய ஐந்து வகை ஆமைகள் காணப்படுகின்றன. கடலின் தூய்மைப் பணியை ஆமைகளும் செய்வதால் ஆமைகளுக்குக் கடல் துப்புரவாளர்கள் என்ற பெயரும் உண்டு.

உலகிலேயே அதிக வருடம் உயிர் வாழக்கூடிய தோணி ஆமைகள் கடல் ஆமைகளிலேயே மிகப் பெரியதும், அதிக எடை கொண்டதும் ஆகும். அதிகபட்சமாக 800 கிலோ எடையும் ஒன்பது அடி நீளம் வரையிலும் வளரக்கூடியது. பெண் தோணி ஆமைகள் முட்டையிடுவதற்காக 6,000 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் நீந்தக்கூடியது. சுமார் 500 முதல் 1,000 மீட்டர் கடலின் ஆழம் வரையிலும் 30 நிமிடம் வரையிலும் மூச்சு பிடித்து நீந்தும் திறன் கொண்டவை.

மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை தோணி ஆமைகள் உணவாக உட்கொள்கின்றன. இதன் மூலம் மீன்வளம் காக்கப்படுகிறது. ஆனால், காலநிலை மாற்றம், கடல் மாசுபாடு, தடை செய்யப்பட்ட மீன் பிடித்தல், கடலில் பிளாஸ்டிக் கலத்தல் ஆகியவை தோணி ஆமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகி வருகின்றன. மேலும் இந்த வகை ஆமைகள் அழகு சாதனப் பொருட்களுக்காகவும், மாமிசத்துக்காகவும் அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் மிக வேகமாக அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23.02.2017 அன்று ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மன்னார் வளைகுடா கடற்கரை கிராமத்தில் 125 நீளம் 1.50 மீட்டர்; அகலம் 1.35 மீட்டர், சுற்றளவு 2.68 மீட்டர் கொண்ட அரியவகை 125 வயதுடைய அரியவகை தோணி ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இந்நிலையில் சுமார் 4 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னார் வளைகுடா கடலில் இந்த ஆமை தென்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய இந்த அரியவகை தோணி ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in