Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்: பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு

கோப்புப்படம்

சென்னை

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற் றுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் அவர்கள் கூறியிருப்பதாவது:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: விவசாயிகளின்வருமானம் பன்மடங்கு உயரும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் கடந்த 2020-ம் ஆண்டு3 வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டன. இருப்பினும் இந்த மூன்று சட்டங்களால் விளைபொருட்களில் பெரும் வணிகநிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கும் என்று தெரிவித்து ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் வேளாண்சட்டங்களில் உள்ள பயன்களை விவசாயிகள் ஒரு பிரிவினரிடம் புரிய வைக்க முடியவில்லை என்றுதெரிவித்து, அந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பிரதமருக்கு உரிய பெருந்தன்மையும், விவசாயிகள்பால் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கும், குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்ததற்கும் எனதுநன்றியை பிரதமர் மோடிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டாகதலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடினார்கள். இந்த போராட்டங்களைக் கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, இப்போது திடீரென்று 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்றஇடைத்தேர்தல்களில் ஏற்பட்டதோல்வி, 5 மாநில சட்டப்பேரவைதேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவை பிரதமர் எடுத்திருக்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: வேளாண் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ரூ. 1 கோடி இழப்பீடு தர வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன்.கடந்த ஓராண்டாக கடும் குளிர்,வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தொடக்கத்திலேயே இந்தச் சட்டங்களை திரும்பப் பெற்றிருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான, விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இது கடந்த ஓராண்டாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: இந்திய வரலாற்றில் தனி முத்திரை பதித்த விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மத்திய அரசைப் பணிய வைத்த ஜனநாயக சக்திகளுக்கும், உறுதி குறையாது போராடி வந்த விவசாயிகளுக்கும் நன்றி.

விசிக தலைவர் திருமாவளவன்: வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பாஜக நடத்தும் நாடகம்தான் இந்த அறிவிப்பு. இதை நம்பிவிவசாயிகள் ஏமாந்துவிடக் கூடாது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ள செய்தி,விவசாயிகளுக்கும், மக்களாட்சிக்கும், நியாயத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மக்கள்சக்திக்கு முன் எந்த ஆட்சியும் தலைவணங்கித்தான் ஆகவேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது விவசாயிகளுக்கு நல்ல செய்தி. விவசாயிகளுக்கு மத்திய அரசு என்றும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை பிரதமரின் இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்: பிடிவாதப் போக்கை கைவிட்டு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் பாராட்டுக்குரியவர். அதுபோல குடியுரிமைச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. குளிர், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் உயிர்த் தியாகங்கள் செய்து விவசாயிகள் ஒரு வருடமாக நடத்திய அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: பிரதமர் மோடியின் இன்றைய அறிவிப்பு, அறவழியில் அல்லும் பகலும் சளைக்காமல் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள அபாரமான வெற்றி.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஓராண்டுக்கு மேலாக மன உறுதியுடன் போராடிய விவசாயிகளுக்கு பாராட்டுகள்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சிஅளிக்கிறது. வேளாண் விளைபொருட்களுக்கு அதன் உற்பத்தி செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவீதம் விலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். நமது விவசாயத்தின் எதிர்காலம் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விலை ஆகிய மூன்று முனைகளில் நாம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பொறுத்தது. இவை ஒரேநேரத்தில் கவனிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கைகளில் தெரிவித்துள்ளனர்.

மேலும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடுவணிகர் சங்கங்களின் பேரமைப்புபொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு உள்ளிட்டோரும் வேளாண்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x