

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் நாளை சென்னை வருகின்றனர்.
தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் பயிர்பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை அமைத்தார். இக்குழு அளித்த அறிக்கையின்படி கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்.
அப்போது, உடனடி நிவாரணமாக ரூ.549.63 கோடி மற்றும், நிரந்தர சீரமைப்புக்கு என மொத்தம் ரூ.2,629.29 கோடி வழங்கவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அமித் ஷா உறுதி
இதையடுத்து, மத்திய குழுவை உடனடியாக அனுப்பி ஆய்வு செய்வதாக மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.
இதன்படி, நேற்று முன்தினம் மத்திய உள்துறை இணை செயலர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை உத்தரவிட்டது. இக்குழு விரைவாக தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த குழு வரும் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழுவில் ராஜீவ் சர்மா தவிர, மத்திய நிதித் துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண் துறை (ஐடி) பிரிவு இயக்குநர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் இயக்குநர் ஆர்.தங்கமணி, டெல்லியில் உள்ள மத்திய எரிசக்தி துறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல அதிகாரி ரணன்ஜெய் சிங், மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பு செயலர் எம்விஎன் வரபிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல்வருடன் சந்திப்பு
நாளை சென்னை வரும் இக்குழுவினர், முதலில் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்கின்றனர். அதன்பிறகு, சில குழுக்களாக பிரிந்து, மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு திரும்பியதும், முதல்வர் ஸ்டாலினையும் சந்திப்பார்கள் என தெரிகிறது.