

இளைஞர்களின் வாழ்க்கை முறை மாறியதால் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் மூலம்பாதிப்பில் இருந்து விடுபடுவதோடு, முக்கிய உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது என்று சென்னை அப்போலோ மருத்துவமனையின் பெருங்குடல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறினார்.
அப்போலோ மருத்துவமனை, ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் பெருங்குடல் ரோபோடிக் அறுவை சிகிச்சைதொடர்பான வலையொலி கருத்தரங்கு கடந்த 17-ம் தேதி நடந்தது.
இதில், சென்னை அப்போலோ மருத்துவமனையின் பெருங்குடல் அறுவை சிகிச்சைத் துறை தலைவரும், பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
இந்தியாவில் லட்சத்துக்கு 4பேருக்கு பெருங்குடல் புற்றுநோய் காணப்படுகிறது. ஆசிய இளைஞர்களின் வாழ்க்கை முறைமாறியதே இதற்கு காரணம்.
அசைவ உணவை குறைப்பது, புகை, மது பழக்கத்தை கைவிடுவது, ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, நிறைய தண்ணீர் குடிப்பதால் பெருங்குடல் புற்றுநோயை தவிர்க்க முடியும்.
அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளின் நரம்புகள், தசைகள், இடுப்பு பகுதியின் முக்கிய உறுப்புகளை பாதுகாப்பது முக்கியம். அப்போதுதான், இயல்பான வாழ்க்கையை தொடர முடியும். ரோபோடிக் அறுவை சிகிச்சையில் இது சாத்தியமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் பெருங்குடல் நோய்களுக்கான இந்தியாவின் முதல் சிறப்பு பிரிவை (2016-ம்ஆண்டு) உருவாக்கியதில் பெரும்பங்கு ஆற்றியவர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். இவர் நாட்டிலேயே அதிகஅளவிலான பெருங்குடல் புற்றுநோய் ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை (40) செய்தவர் என்றபெருமைக்கு உரியவர்.
அப்போலோ மருத்துவமனையின் பெருங்குடல் அறுவை சிகிச்சைத் துறையில் மூலநோய், ஆசனவாய் வெடிப்பு, பவுத்திரம், குடற்பகுதி கட்டிகள், புற்றுநோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
‘வருமுன் காப்பதே நலமான வாழ்வுக்கு அடித்தளம். எனவே, நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை புறந்தள்ளக் கூடாது. தாமதம் இல்லாமல் கண்டறிந்தால் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தலாம்’ என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.