Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பட்டயக் கணக்காளர்கள்: கோவை மாநாட்டில் காணொலி வாயிலாக முதல்வர் பெருமிதம்

கோவை

நாட்டின் வளர்ச்சியில் பட்டயக் கணக்காளர்கள் முக்கிய பங்காற்றுவதாக தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவன மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் 53-வது மண்டல மாநாடு கோவையில் நேற்று தொடங்கியது. இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வில்,தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் கே.ஜலபதி வரவேற்றார். இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின்காணொலி வாயிலாக மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதில், வடிவமைப்பதில் பட்டயக் கணக்காளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்த நற்பெயர் எப்போதும் நிலைத்திருக்கும் வகையிலும், அரசின் கரங்களை வலுப்படுத்தும் வகையிலும் இவர்களின் பணிகள் தொடர்ந்து அமைய வேண்டும்.

கற்றல், காலத்துக்கு ஏற்ப புதுப்பித்தல் ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வோர் பட்டயக் கணக்காளர்கள் துறையிலும் அதிகம் உள்ளனர் என்பது சிறப்புக்குரியது. இதுபோன்ற நிகழ்வுகளில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளையும் அழைப்பதன் மூலமாக இருதரப்பிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள உதவும். இதனால் சமுதாயம் பயன்பெறும்.

தமிழகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு ஆகியவற்றில் நிறுவனங்களின் மோசடிகளை விசாரிக்க தமிழக அரசு சார்பில் புதிய தணிக்கைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், அரசின் உயர் பதவிகளில் பட்டயக் கணக்காளர் துறையைச் சார்ந்த பலர் உள்ளனர். அரசுஅமைக்கும் முக்கிய குழுக்களிலும் இடம்பெற்று தகுந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

இச்சூழலில் நிதிநிலையை சீராக்குவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கையிலும் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை இவர்கள்தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவித்தால் உடனடியாக கவனம் செலுத்தி நடைமுறைப்படுத்த அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு, தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் காணொலி வாயிலாக பேசினார். இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத் தலைவர் நிஹார் என்.ஜம்புசாரியா, முன்னாள் தலைவர் ஜி.ராமசாமி ஆகியோரும் பட்டயக்கணக்காளர் துறையில் தற்போதைய நிலை, மேம்படுத்திக் கொள்ள வேண்டியவை உள்ளிட்ட அம்சங்கள் குறித்துப் பேசினர். தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 5,700-க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் நேரடியாகவும், இணையவழியிலும் இதில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x