Published : 20 Nov 2021 03:07 AM
Last Updated : 20 Nov 2021 03:07 AM

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது; முதல்வர் ஸ்டாலினுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி: சேலத்தில் அமைச்சர்கள் பெருமிதம்

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றதையடுத்து சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். உடன் எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

‘புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது முதல்வர் ஸ்டாலினுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி,’ என சேலத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

சேலத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் நேற்று நடந்த சிறப்பு மக்கள் குறை தீர் முகாமில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் மனுக்களை பெற்றனர். முகாமுக்கு ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது:

முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக 26,245 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முகாமில் வேலைவாய்ப்பு வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இந்நிலையில், வரும் 26-ம் தேதி சேலம் சோனா கல்லூரியில் நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று கல்வித் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை பெற்று பயனடையலாம், என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு கூறும்போது, ‘வேளாண் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து சட்டப்பேரவையில் மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடத்திய போராட்டத்தின்போது 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். புதிய வேளாண் சட்டம் வருவதற்கு அப்போதைய அதிமுக அரசு தான் காரணம். தற்போது, புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றது முதல்வர் ஸ்டாலினுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி,’ என்றார்.

தொடர்ந்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை அறிவித்த முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தது, விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியது நாடு முழுவதும் எதிரொலித்தது. தற்போது, அந்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.

விவசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இது மத்திய அரசுக்கு ஏற்பட்ட தோல்வி, என்றார்.

நிகழ்ச்சியில் 33 பயனாளிகளுக்கு ரூ.4.52 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றதையடுத்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x