கோப்புப்படம்
கோப்புப்படம்

கனமழை காரணமாக சென்னை மாநகரில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

Published on

கனமழை காரணமாக சென்னையில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்தில் தற்காலிகமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழையைத் தொடர்ந்து சென்னையில் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மீட்புப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸார் மற்றும் பிற துறையினரும் மீட்புப் பணியில் களத்தில் இறங்கினர்.

இந்நிலையில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தி.நகர், பசுல்லாசாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால்,ஜி.என்செட்டிசாலை–வாணிமஹால் சந்திப்பிலிருந்து பசுல்லா சாலை செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாகத் திருப்பிவிடப்படுகின்றன.

சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரியத்தினர், அண்ணா பிரதான சாலையில் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன்காரணமாக கே.கே.நகர் ஜி.ஹெச்.க்கு எதிரே உள்ள அண்ணாபிரதான சாலையில், உதயம் திரையரங்கம் நோக்கிச் செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

சாந்தி காலனி 4-வது அவென்யூவில் மெட்ரோ கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருவதால், திருமங்கலம் செல்லும் வாகனங்கள் 3-வதுஅவென்யூவில் இருந்து 2-வதுஅவென்யூ நோக்கி திருப்பி விடப்படுகின்றன. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in