

சென்னையின் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்பு படை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை புதுவை நகர் சிறு தொழில் வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘‘சென்னையின் பிரதான சாலையாக ஜிஎஸ்டி சாலை உள்ளது. இந்த சாலையில் பலரும் தொழில் நிறுவனங்களை திறப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இங்கு கடைகள் மற்றும் ஓட்டல்கள் முன்பாக சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்த போலீஸார் மாமூல் வாங்கிக்கொண்டு அனுமதி அளிக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் காரணமாகசிறு தொழில்கள் பாதிக்கப்படுகின்றன” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “சென்னையில் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்டமுக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை திறமையான முறையில் கட்டுப்படுத்த சிறப்புப் படையை மாநகர காவல்ஆணையர் அமைக்க வேண்டும். சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்த அனுமதிக்கும் போலீஸார் மீதும், நிறுவனங்கள் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக வரும் டிச.21அன்று மாநகர காவல் ஆணையர்அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.