நீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ளது பூண்டி ஏரி. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான இந்தஏரிக்கு, மழையின் காரணமாக அதிக அளவில் நீர் வந்து கொண்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 10-ம்தேதி முதல் உபரிநீர், கொசஸ்தலையாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு ஆயிரம் கன அடிஎன வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு, நீர் வரத்தின் அளவை பொறுத்து, அவ்வப்போது அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தது.

ஆந்திர மாநிலம்- கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து நேற்று முன்தினம் மதியம் 3 மணி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி என, வெளியேற்றப்பட்ட அந்த உபரிநீர், நீர் வரத்தைப் பொறுத்து, அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது. அந்த நீரும், திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டாரங்களில் பெய்யும் மழைநீரும் நேற்று மாலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் மதியம் 3 மணி முதல், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, அன்று மாலை 5 மணி முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.

அது நேற்று காலை 8 மணியளவில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாகவும், 9.30 மணியளவில் 18 ஆயிரம் கன அடியாகவும், 10 மணியளவில் 21 ஆயிரம் கன அடியாகவும், மதியம் 1.30 மணியளவில் 25 ஆயிரம் கன அடியாகவும் உயர்த்தப்பட்டது.

இச்சூழலில், நேற்று மதியம் 3 மணியளவில், பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 42 ஆயிரம் கன அடி என, நீர் வந்து கொண்டிருந்தது. ஆகவே, பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணாபுரம் அணையின் உபரிநீரால், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே உள்ள பட்டரைபெரும்புதூர், நாராயணபுரம் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், அப்பகுதிகளில் நேற்று மதியத்துக்கு பிறகு சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மாலைக்குப் பிறகு, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in