பண மோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் சரோஜாவை நவம்பர் 24 வரை கைது செய்யக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் சரோஜாவை நவம்பர் 24 வரை கைது செய்யக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.76.50 லட்சம் மோசடி செய்ததாக பதியப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக நவ. 24 வரை கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சரோஜா. சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.76.50 லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜன் மீது குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் சரோஜா மற்றும் அவரது கணவர் மீது போலீஸார் பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘வேலை வாங்கித் தருவதாக கூறி யாரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபடவில்லை.

புகார் அளித்துள்ள குணசீலன் எங்களது உறவினர்தான். குடும்ப பகை காரணமாக பொய் புகார் அளித்துள்ளார். சத்துணவு அமைப்பாளர்களை தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்தான் நியமிக்கின்றனர். இந்த புகார் தொடர்பாக ராசிபுரம் போலீஸார் ஏற்கெனவே தங்களிடம் விசாரித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனு, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, இதுதொடர்பாக பதிலளிக்க காலஅவகாசம் வேண்டும் என கோரினார்.

அதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை நவ.24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in