ஒருபுறம் மறுகால் பாயும் கண்மாய்கள்; தொடர் மழையிலும் தண்ணீர் வராத கூடலழகர் பெருமாள் தெப்பம்

தண்ணீரின்றி வறண்டு காணப்படும் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
தண்ணீரின்றி வறண்டு காணப்படும் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரையில் சில வாரங்களாக அடை மழை பெய்தும், கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பம், முத்துப்பட்டி கண்மாய் வறண்டு காணப்படுகின்றன.

கடந்த சில வாரமாக வடகிழக்கு பருவமழை மதுரையில் தினமும் பெய்து வருகிறது. தூர்வாரி ஆழப்படுத்தப்படாததால் செல்லூர், வண்டியூர் கண் மாய்களில் போதுமான தண்ணீர் நிரம்பாமலேயே மறுகால் பாய்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

ஆனால், தெப்பக்குளத்துக்குள் தண்ணீர் செல்ல வழியின்றி டவுன் ஹால் ரோட்டிலுள்ள கூடலழகர் பெருமாள் தெப்பம் ஒரு சொட்டு தண்ணீரின்றி காணப்படுகிறது.

கடந்த காலங்களில் பெரியார் பஸ் நிலையம் பகுதியில் பெய்யும் மழைநீர் இயல்பாகவே கூடலழகர் தெப்பத்துக்கு வந்து சேரும். ஆனால் தற்போது மதுரையில் அடைமழை பெய்தும், பெரியார் பஸ்நிலையம், ரயில் நிலையம், நேதாஜி சாலை, டவுன்ஹால் ரோடு ஆகிய பகுதிகளில் தெப்பம் போல் தண்ணீர் தேங்கியும் ஒரு சொட்டு மழைநீர் கூட இந்த தெப்பக்குளத்துக்குள் வரவில்லை.

கடந்த ஆண்டு இந்து அறநிலைத் துறையும், மாநகராட்சியும் இத் தெப்பத்தின் நீர்வரத்துக் கால் வாயை பராமரித்து மழைநீர் வர ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஆனால் இன்னும் சொட்டு தண் ணீர் கூட தெப்பத்துக்கு வரவில்லை. ஆனால், அறநிலையத் துறை அதிகாரிகளும், மாநகராட்சியும் இதனை கண்டுகொள்ளவில்லை..

அதுபோல், தென் மதுரையின் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக திகழ்ந்த முத்துப்பட்டி கண்மாய் புதர் மண்டி கண்மாயா? கருவேல மரக்காடா? எனும் அளவுக்கு பராமரிப்பின்றியும், தண்ணீரின்றியும் காணப்படுகிறது.

இதுகுறித்து முத்துப்பட்டி பகு தியை சேர்ந்த பாலா கூறியதாவது: ‘‘இந்த தொடர் மழையிலும் முத்துப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீர் வரு வதில்லை. கண்மாய் முழுவதும் கருவேல மரங்களாக புதர் மண்டி கிடக்கிறது.

இக்கண்மாய்க்கு மாடக்குளம் கண்மாய் நிரம்பியதும் அங் கிருந்து தண்ணீர் வரும். தற் போது மாடக்குளம் கண்மாயின் மறுகால் தண்ணீர் வரும் பாதை பல இடங்களில் அடைபட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் இருப்பதால் இக்கண்மாய்க்கு நீர்வரத்து தடை பட்டுள்ளது.

முத்துப்பட்டி கண்மாய் நிரம்பி னால் முத்துப்பட்டி, டிவிஎஸ் நகர், அழகப்பன்நகர், சத்யசாய் நகர், கோவலன்நகர் உள்ளிட்ட சுற்று வட்டார குடியிருப்பு பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் உயரும். தற்போது இந்த கண்மாயையும், நீர்வரத்து கால்வாய்களையும் தூர் வாராததால் மழைக்காலத்திலும் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. கோடை காலத்தில் வீட்டு உபயோகத்துக்கு டிராக்டர், லாரி தண்ணீரை வாங்க வேண்டிய நிலை உள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in