

திமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டணிக் கட்சி களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்பில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திராவிடர் கழகம் சார்பில் திருச்சி சிறுகனூரில் சமூகநீதி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அதிமுகவினர் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணையத்தின் பணிகளில் பல குறைகள், பிரச்சினைகள் உள்ளன. இதுகுறித்து டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பில்லை. திமுக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்ததும், தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
திமுகவுக்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதிமுக ஆட்சியின் மீதுள்ள வெறுப்பால், பல்வேறு தரப்பினரும் போட்டிபோட்டுக் கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவளிக் கின்றனர். இதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். ஏற்கெனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. தற்போது, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சிகள் இணைந்துள்ளன. இன்னும் பல இயக்கங்கள் சேரவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்த் சந்திப்பா?
திமுக தலைவர் கருணாநிதியை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே என்று ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “அப்படி ஏதாவது சந்திப்பு இருந்தால் சொல்லுங்கள். உங்களுக்குத் தெரியாமல் அவர் சந்திக்க வந்தால், அதுகுறித்து நான் உங்களிடம் கூறுகிறேன்” என்றார்.
அதேபோல, திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை விட்ட பிறகுதான் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியே வந்துள்ளாரே என்று கேட்டதற்கு, “நீங்கள் நினைப்பதுபோல அப்படியும் இருக்கலாம்” என்றார்.
இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கும், மதுபானக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளாரே? என்று கேட்டதற்கு, “அவரது பேச்சை நான் பொருட்படுத்துவதில்லை. அதுகுறித்து நீங்களும் என்னிடம் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார் ஸ்டாலின்.