

பாலாற்றில் 163 ஆண்டுகள் வரலாற்றில் உச்சபட்ச அளவாக 1.04 லட்சம் கன அடிக்கு இரண்டு கரைகளையும் மூழ்கடித்து பெருவெள்ளம் பாய்ந்தோடியுள்ளது.
தமிழகத்தின் வடமாவட்டங் களின் விவசாயத்தை வளமாக்கி ஜீவாதாரமாக விளங்கும் பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பயணித்து வயலூர் முகத்துவாரத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பயணிக்கும் இடமெங்கும் செழுமை நிறைந்த பூமியாக பாலாறு மாற்றியது என்றால் மிகையில்லை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நேற்று காலை கரையை கடந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் பாலாறும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகபட்ச அளவை எட்டியது.
ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பயணித்து பாலாற்றுடன் கலக்கும் நீவா என்ற பொன்னை ஆற்றில் கடந்த 1930-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 60,600 கன அடிக்கு நீர்வரத்து இருந்தது. பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கடந்த 1855-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான அணைகளில் ஒன்றாகும். அணையின் உயரத்தைவிட 3 அடி அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தோடியது. கீரைசாத்து அருகே பொன்னையாற்றில் சரக்கு வாகனம் ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
பாலாற்றில் பெருவெள்ளம்
தமிழகத்தில் 222 கி.மீ பயணிக்கும் பாலாற்றில் வாலாஜா அருகே கடந்த 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அணை கட்டும் பணியை தொடங்கினர். 1858-ம்ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அணையில் 4,825.2 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் 14,309 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
சுமார் 163 ஆண்டுகள் பழமையான அணையை கடந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் உச்சபட்ச அளவாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 54 கன அடி நீர் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கடந்தது. 1903-ம்ஆண்டு 504.23 கன அடி வெள்ளத்தால் பாலாறு அணைக்கட்டு சேதமடைந்துள்ளது. இதை 1905-ம் ஆண்டு சரி செய்துள்ளனர். 1903-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் வாணியம்பாடி நகரம் நீரில் மூழ்கியதுடன் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். திடீர் வெள்ளத்தால் பாலாறு வாணியம்பாடி நகரில் மூன்றாகப் பிரிந்து மீண்டும் ஆம்பூர் அருகே ஒன்றாக சேர்ந்து அகண்ட பாலாறாக பயணிக்கிறது. பெருவெள்ளத் தால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்தனை தரைப்பாலங்களும் மூழ்கி போக்குவரத்து துண் டிக்கப்பட்டது.
பள்ளிகொண்டாவில் பாலாற்றின் கரையோரத்தில் கட்டப்பட்டி ருந்த சொகுசு பங்களா ஒன்று வெள்ளத்தில் சரிந்து அடித்துச் செல்லப்பட்டது. வன்னிவேடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 7 குடும்பத்தினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்கப் பட்டனர். ஆற்காடு அருகே பாலாற்றின் கரையோரம் வெள்ளத் தில் சிக்கிய 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காவிரி குடிநீர் விநியோக திட்டத்தில் பாதிப்பு
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது, பாலாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வழங்கும் பிரதான குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால், குடிநீர் விநியோக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊரக பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகே குழாய்கள் சீரமைக்க முடியும் என்பதால் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களின் மூலம் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்துமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.