

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரப் பகுதிகள், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் கரையோர கிராமப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கே.எஸ். அழகிரி, செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ளத்தினால் மிகக் கடுமையான பாதிப்பினை கடலூர் சந்தித்துள்ளது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய - மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும். மாநில அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்கி உதவ வேண்டும்.
மேலும், விவசாயிகள் 18 மாதங்களாக பனி, இரவு-பகல் பாராமல் போராடியதன் விளைவாகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றுள்ளது.
இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. காந்திய வழியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இடைத்தேர்தல்களில் பாஜக அடைந்த தோல்வியே இந்த சட்டங்களை திரும்பப்பெற காரணம். விவசாயிகள் மீதான அக்கறை இல்லை என்று கூறினார்.