

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து தமிழகத்தில் உள்ள விவசாய பிரதிநிதிகள் பலரும், இதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் செயல்பாட்டுக்கு வந்தால்தான் பலன் கிடைக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ரங்கநாதன் (தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்க பொதுச்செயலர் மன்னார்குடி):
2016-17 பட்ஜெட்டில் வேளாண்மைக்கும், கிராம உள்கட்டமைப்புக்குமான அறிவிப்புகள் சிறப்பாக உள்ளது. அது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையாக மாறிவிடாமல், செயல்பாட்டுக்கு வர வேண்டும்.
குறிப்பாக பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், அதில் காப்பீட்டு சந்தா தொகையில் 1.5 சதவீதம் மட்டுமே விவசாயிகள் செலுத்த வேண்டும் போன்ற அம்சங்கள் வரவேற்கத்தக்கது.ஆனால் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அத்திட்டம் குறித்து யாருக்கும் போதிய தகவல்கள் தெரியவில்லை. இந்நிலையில் இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவார்கள் என்ற ஐயம் எழுந்துள்ளது.
உலக புகழ்பெற்ற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் போன்று பயிர் காப்பீட்டு கழகம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அரசும், தனியாரும் சேர்ந்து செயல் படுத்துவதாக பட்ஜெட்டில் கூறப் பட்டுள்ளது. இது ஏற்புடையதாக இல்லை.
2022-ல் விவசாயிகளின் வருவாய் 2 மடங்காக உயரும் என்ற அறிவிப்பு ஆச்சரியம் அளிக்கிறது. அரிசிக்கு கிடைக்கும் விலை, நெல்லுக்கு கிடைப்பதில்லை. வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இல்லை என்றார்.
பி.ஆர்.பாண்டியன் (தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்):
இந்த பட்ஜெட்டில் 89 புதிய நீர்ப்பாசன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 5 லட்சம் ஏக்கரில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.412 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதற்கான நிதி ரூ.7 லட்சம் கோடியிலிருந்து ரூ.9 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை எல்லாம் வரவேற்கத் தக்கதாக உள்ளன.
ஆன்லைன் வர்த்தகம், மின்னணு முறையில் சந்தைப் படுத்தும் திட்டம் வரவேற்க தகுந்ததாக இருந்தாலும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கான நிதி ரூ.2 லட்சம் கோடி உயர்ந்திருந்தாலும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. புதிய நீர் பாசன திட்டங்கள் இடம்பெற்ற இந்த பட்ஜெட்டில், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எதுவும் இல்லை. காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டங்களும் இல்லை.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் சில தொலைநோக்கு பார்வையும், வரவேற்பும், ஏமாற்றமும் கலந்ததாக உள்ளது என்றார்.
எஸ்.பாலசுப்பிரமணியன் தீட்ஷிதர் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டதலைவர்):
மத்திய அரசு விவசாயத்துக்காக ரூ.86 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், விவசாயத்தில் எந்த இனங்களுக்கு எவ்வளவு என தெளிவாகக் குறிப்பிடவில்லை. இதனால் இந்த நிதி முழுவதும் விவசாயத்தை மேம்படுத்த பயன்படுமா? என்கிற கேள்வி எழுகிறது.
விலைபொருள்களை உற்பத்தி செய்வது பெரிய சவாலாகஇருக்கும் நிலையில், அதில் மாற்றம் செய்யாமல்விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் 2 மடங்கு உயரும் என்பதுவெறும் கண்துடைப்பு அறிவிப்பு.
தமிழகத்தில் விவசாயம் தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதனால், தென்னக நதிகள் இணைப்பு திட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.மேலும் கேரளாவில் ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கும்நீரின் அளவு 2 ஆயிரம் டி.எம்.சி. இந்த தண்ணீரை தமிழகத்துக்கு திருப்பிவிடும் திட்டம் குறித்த அறிவிப்பும், அவினாசி,குண்டலாறு திட்டம் குறித்த அறிவிப்பும் இல்லாதது தமிழகவிவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம்.
விவசாயத்துக்கான அறிவிப்புகளைப் பொருத்த வரை இந்தபட்ஜெட் வெளியே பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக தெரிகிறது.ஆனால், ஆராய்ந்து பார்த்தால் ஏமாற்றமே அளிக்கிறது.