Last Updated : 19 Nov, 2021 05:03 PM

 

Published : 19 Nov 2021 05:03 PM
Last Updated : 19 Nov 2021 05:03 PM

தமிழக நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தலான சூழல்; விழிப்புணர்வு ஏற்படுத்துக: கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ 

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தலான சூழல் இருந்து வருவதால், அவற்றைப் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை தெரிவித்தார்.

உலக மரபு வார விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி இன்று (நவ.19) நடைபெற்றது.

கண்காட்சியை கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்துப் பேசும்போது, ''புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. ஆனால், மழைக் காலத்தில் தண்ணீர் மிதமிஞ்சி இருப்பதாகவும், வெயில் காலத்தில் பற்றாக்குறை இருப்பதாகவும் கருதுகிறோம்.

இந்தக் கண்காட்சியின் மூலம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் மழை நீரைப் பாதுகாப்பாகத் தேக்கிவைத்து, சிக்கனமாகப் பயன்படுத்தி வந்திருப்பதை அறிய முடிகிறது.

மேலும், நீர்நிலைகளைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது கண்டிப்புடனும் தமிழர்கள் இருந்துள்ளனர். நீர் மேலாண்மையில் புதுக்கோட்டை முன்னோடியாக இருந்திருப்பது பெருமிதப்படுத்துகிறது. தற்போது, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தலான சூழல் இருந்து வருவதால், அவற்றைப் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்தார்.

கல்வெட்டு கண்டுபிடிப்பு, படைப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில், தான் சேகரித்துள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அஞ்சல் தலை, நாணயங்களைப் புதுக்கோட்டை நாணயவியல் கழகத் தலைவர் பஷீர் அலி காட்சிப்படுத்தி, மாணவர்களுக்கு விளக்கினார்.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்போருக்குத் தண்டனை வழங்கியது, மரம் வெட்டியோருக்கு அபராதம் விதித்தல், முன்மாதிரி நீர்ப்பாசன முறைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நீர் மேலாண்மை தொடர்பாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சான்றுகளைப் பற்றி பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் காட்சிப்படுத்தினார். இக்கண்காட்சியைப் பள்ளி மாணவர்கள் பார்த்து, விவரங்களை அறிந்து சென்றனர்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் வெ.பழனிவேல், ஒன்றியக் குழுத் தலைவர் ரெ.பழனிவேல், வட்டாட்சியர் புவியரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x