சுவர் இடிந்து 9 பேர் பலி; ரூ.10 லட்சம் இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பேரணாம்பட்டு மசூதி தெருவில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மசூதி தெருவில் மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த சுவர் விழுந்ததில் 4 குழந்தைகள், 5 பெண்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடங்கிய நாள் முதலே கடுமையாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை அனைத்துத் தரப்பினருக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இயல்பு வாழ்க்கை, கட்டமைப்பு சேதம், பயிர்கள் சேதம் உள்ளிட்ட ஏராளமான சேதங்களை வடகிழக்குப் பருவமழை ஏற்படுத்தியுள்ளது.

பருவமழை தொடங்கியது முதல் இதுவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே நிகழ்வில் குழந்தைகள், பெண்கள் என 9 பேர் உயிரிழந்திருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அண்மைக் காலங்களில் இல்லாத வகையில் அதிக மழை குறைந்த கால அளவில் பெய்திருப்பதால் சுவர்கள் இயல்பாகவே வலுவிழந்திருக்கக் கூடும். அத்தகைய சூழலில் கூடுதலாக மழை பெய்தாலோ, காற்றடித்தாலோ சுவர் இடிந்து விழுந்து உயிர்களைக் குடிக்கும் வாய்ப்புள்ளது.

அதிக மழை பெய்த பகுதிகளில் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் வலுவிழந்த, பழமையான, முறையாகப் பராமரிக்கப்படாத வீடுகளில் வாழும் மக்களை அங்கிருந்து அகற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.50,000 இழப்பீடும் போதுமானதல்ல. அது அவர்களின் இழப்பை ஈடு செய்யாது. எனவே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியுடன் உலகத்தரமான சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்."

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in