Published : 19 Nov 2021 11:57 AM
Last Updated : 19 Nov 2021 11:57 AM

செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்தி மாணவர் நலன் காக்கவும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

கல்லூரி மாணவர்கள் நலனைக் காக்கும் வகையில் வரவுள்ள செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழக உயர்கல்வி மாணவர்களின் கோரிக்கையான செமஸ்டர் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்பதைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்திலும் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கு பதிலாக ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்தல் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன.

ஆன்லைன் தேர்வுகளில் வினாத்தாள் ஆன்லைனில் அனுப்பப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதினர். இப்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுப் பாடம் கற்பிக்கப்படுகிறது. நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், உயர் கல்வித்துறை, செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவித்தது.

ஆனால், இந்த முறை செமஸ்டர் தேர்வை நேரடியாக இல்லாமல் ஆன்லைனிலேயே நடத்த வேண்டுமென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையே பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆதரிக்கின்றனர்.

குறிப்பாகப் பொறியியல் கல்லூரிகள் நேரடி வகுப்புகளை நடத்தாமல் ஆன்லைன் வகுப்புகளையே நடத்தி வந்தன. நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. நேரடி வகுப்புகளை நடத்தாமல் நேரடித் தேர்வுகளை நடத்த அறிவித்திருப்பது கவலை அளிப்பதாகப் பொறியியல் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த முறை செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக (ஆஃப்லைன்) நடத்தினால் தேர்வு எழுதுவதும், தேர்ச்சி பெறுவதும் கடினம் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகளை ஆன்லைனில் நடத்தியிருப்பதால் இந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

எனவே தமிழக அரசு செமஸ்டர் தொடர்பாக வெளியிட்ட நேரடித் தேர்வுக்கான அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போது சென்னை, மதுரை, புதுக்கோட்டை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் எனப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு இந்த முறை செமஸ்டர் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தவும், மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறவும் நல்ல முடிவு எடுத்து மாணவர்கள் நலன் காக்க வேண்டும்".

இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x