மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ்; முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு: விவசாயிகளுக்குப் பாராட்டு

முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம்.
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம்.
Updated on
1 min read

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளதை முழுமனதுடன் வரவேற்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும். இதுவே வரலாறு சொல்லும் பாடம். விவசாயிகளின் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும். அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று விவசாயிகள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், ஒரு பகுதி விவசாயிகளின் ஒருபகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம். போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்காக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும். இதனால், விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு தத்தம் களப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in