Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழு வருகிறது: 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் நிறைவான அறிக்கை தர இந்தக் குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதைத் தொடர்ந்து பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்து விவரங்களை சேகரிக்க ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அந்தக் குழு டெல்டா மாவட்டங்களில் மழை சேதத்தை பார்வையிட்டு, ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் வழங்கியது. அதன் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு நேற்று முன்தினம் அளித்தார்.

மழை வெள்ள பாதிப்பு களை சீர் செய்ய தமிழகத் துக்கு ரூ.2.692 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுபற்றி முதல்வரிடம் அமித் ஷா தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது உடனடியாக மத்தியக் குழுவை அனுப்பி ஆய்வு செய்வதாக உறுதி அளித்ததாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில் மத்திய வேளாண் துறை, நிதித் துறையின் செலவினப் பிரிவு, ஜல்சக்தி (நீர்வளம்), எரிசக்தி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளின் அதிகாரிகள் இடம்பெறுகின்றனர்.

இக்குழுவின் தலைவருக்கு 2017-18 முதல் 2020-21 வரை பல்வேறு திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதி தொடர்பான தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்தக் குழு விரைவாக தமிழகம் சென்று ஆய்வு செய்து, திரும்பியதும் நிறைவான அறிக்கையை ஒரு வாரத்துக்குள் மத்திய உள்துறைக்கு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதனிடையே, வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் உள்ளது. இதன் தாக்கம் ஏற்கெனவே நிலப்பகுதியை தொட்டுவிட்டது. அதனால் இது இனிமேல் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.

காற்று வேகமாக சுற்றுவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறாது என கணிக்கப்பட்டது. கரையை நெருங்கும் வேளையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் அழுத்தம் குறைவாக இருந்ததால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை (இன்று) அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கக் கூடும். அப்போது வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங் களில் மிக கனமழை பெய்யும்.

அதன்பிறகு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் குந்தலத்தில் 20 செ.மீ., தாராபுரத்தில் 13, தஞ்சாவூர், திருப்பூர், நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொதுமக்கள், மாணவர்கள் தங்கள் அடையாள அட்டைகள், கல்விச் சான்றுகள், பட்டா, பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வெள்ளநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்களும், தன்னார்வலர்களும் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தர விட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x