வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு ரத்து; உச்ச நீதிமன்றத்தில் உயர்கல்வி துறை மேல்முறையீடு: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சட்டத்துறை சார்பிலும் மனு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு ரத்து; உச்ச நீதிமன்றத்தில் உயர்கல்வி துறை மேல்முறையீடு: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சட்டத்துறை சார்பிலும் மனு
Updated on
1 min read

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இயற்றிய சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசின் உயர் கல்வித்துறை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், சட்டத்துறை ஆகியவற்றின் சார்பில் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் உள்ள வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி அதை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஏற்கெனவே தமிழக அரசின் தலைமைச் செயலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தமிழக உயர்கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், சட்டத்துறை ஆகியவற்றின் சார்பிலும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், ‘வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கியிருப்பதால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு துளியும் மீறப்படவில்லை.

உள்இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 1983-ல் நடத்திய கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள்தொகை அடிப்படையிலேயே இந்த உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வன்னியர் சமுதாயத்துக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு செல்லும் என அறிவிக்க வேண்டும்’ என கோரியுள்ளனர்.

கேவியட் மனு

இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் உச்ச நீதி மன்றத்தில் ஏற்கெனவே கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் தங்களது கருத்துகளை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கோரி நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in