முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு; திமுக எம்.பி. ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு: விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளதாக அரசு தகவல்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு; திமுக எம்.பி. ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு: விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளதாக அரசு தகவல்
Updated on
1 min read

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி.யின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.

கடலூர் தொகுதி திமுக எம்.பி.யான டிஆர்விஎஸ் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் உள்ளது. இங்கு வேலை செய்துவந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் எம்.பி. ரமேஷ் கடந்த அக்.11-ல்பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமதுஜின்னா: திமுக எம்.பி. என்பதால் அவரை கடலூர் கிளைச் சிறையில் வைத்து சலுகை காட்டுவதாக, இறந்த கோவிந்தராசுவின் மகன் தரப்பு குற்றம்சாட்டுவது தவறானது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமரா பதிவுகள், தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். எந்த தலையீடும் இல்லாமல் விசாரணை நடந்து வருகிறது. தமிழக அரசே முன்வந்து இந்தவழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது. புலன் விசாரணை நியாயமான முறையில் நேர்மையாக நடந்து வருகிறது.

கோவிந்தராசு மகன் செந்தில்வேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு: விசாரணை அதிகாரிஇந்த வழக்கை நியாயமான முறையில் விசாரிக்கவில்லை. பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல்என்கிற ரீதியில் விசாரணை நடப்பதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். விசாரணை அதிகாரியையும் மாற்ற வேண்டும்.

ஹசன் முகமது ஜின்னா: விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு, புதிய அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே வழக்கை சிபிஐக்கு மாற்ற அவசியம் இல்லை.

இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை இன்று (நவ.19) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in