நீர் மட்டம் 141 அடியை எட்டியதால் முல்லை பெரியாறு அணையில் 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை: கேரளப் பகுதிக்கு நீர் வெளியேற்றம்

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளப் பகுதிக்கு செல்லும் நீர்.
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளப் பகுதிக்கு செல்லும் நீர்.
Updated on
1 min read

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. நீர்மட்டத்தை நிலைநிறுத்த கேரளப் பகுதிக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

முல்லை பெரியாறு அணையில் நீர் நிலைநிறுத்த விதிமுறைப்படி (ரூல் கர்வ்) வரும் 20-ம் தேதி வரை 141 அடி அளவுக்கு நீரைத் தேக்கவும், அதன் பின்பு ஒவ்வொரு நாளும் நீரின் அளவை சிறிது சிறிதாக அதிகரித்து நவ.30-ல் 142 அடியாக உயர்த்தவும் மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

இருப்பினும் நீர்தேக்கப் பகுதியில் பெய்து வரும் கனமழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 141 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து 2-ம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. 142 அடியில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையுடன் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

தற்போது அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,500 கனஅடியாக உள்ளது. தொடர் மழையினால் இதன் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் நவ.30-ம் தேதிக்கு முன்னரே 142 அடியை எட்டும் நிலை உள்ளது. எனவே அணையில் இருந்து நேற்று கூடுதல் நீர்வெளியேற்றப்பட்டது.

இதன்படி அணையின் 3, 4-வதுமதகுகள் நேற்று காலை திறக்கப்பட்டு விநாடிக்கு 772 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்பு 10 மணிக்கு 2, 5-வது மதகுகள் திறக்கப்பட்டு மொத்தம் 4 மதகுகள் வழியே விநாடிக்கு 1,544 கனஅடி தண்ணீர் கேரளப் பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. தமிழக பகுதியை பொறுத்தளவில் 4 ராட்சத குழாய்களின் வழியே விநாடிக்கு 1,600 கனஅடி மற்றும் இரைச்சல் பாலம் வழியே 800 கனஅடி என மொத்தம் 2,400 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை கேரளப் பகுதிக்கு நீர் திறக்கும்போது அம்மாநில அமைச்சர்கள், இடுக்கி ஆட்சியர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், இம்முறை யாரும் வரவில்லை. தமிழக பொதுப்பணித் துறையினர் நீரைத் திறக்க, கேரள நீர்வளத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in