

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், வாகன அனுமதி, ஹெலிகாப்டர் பயன்படுத்த அனுமதி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக சென்னை மாவட்ட அளவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் கூறியதாவது:
பிரச்சாரத்தின்போது பொது மக்கள் மத்தியில் பகை, வெறுப்பைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஈடுபடக் கூடாது. வழிபாட்டுத் தலங்களான கோயில், மசூதி, தேவாலயங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. சாதி, இன உணர்வுகளைத் தூண்டி வாக்குகள் சேகரிக்கக் கூடாது.
பொது, தனியார் கட்டிடங்களில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டுவது, விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அரசு, தனியார் கல்வி நிலையங்கள், விளையாட்டு மைதானங்களை பயன்படுத்தக் கூடாது.
பொதுக்கூட்டம், ஊர்வலம் உள்ளிட்டவற்றுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வாகன அனுமதி, பொதுக்கூட்டம், ஊர்வலம், கட்சி அலுவலகம் திறப்பது, ஹெலிகாப்டர் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு இணையதளம் (www.elections.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம்.
மதவழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வாக்குச்சாவடி ஆகியவற்றின் எல்லையில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் அரசியல் கட்சிகளின் தற்காலிக தேர்தல் அலுவலகங்களை அமைக்கக் கூடாது. அரசு, தனியார் நிலங் களை ஆக்கிரமித்தும் அவற்றை அமைக்கக் கூடாது.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவு வரை ஒரு வேட்பாளருக்கு அதிகபட்சம் 3 கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளரையும் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வாக்காளர்களுக்கு வேட்பாளர் கள் சார்பில் வழங்கப்படும் பூத் சிலிப்பில் வாக்காளர் பெயர், வரிசை எண், பாகம் எண், வாக்குச்சாவடி எண், வாக்குப்பதிவு நாள் ஆகியவை மட்டுமே இடம்பெற வேண்டும். வேட்பாளரின் பெயர், சின்னம், புகைப்படம் ஆகியவை இருக்கக் கூடாது. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.28 லட்சம் வரை மட்டுமே செலவு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு சந்திரமோகன் கூறினார்.
இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜி.கோவிந்தராஜ், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலவர்கள் டி.ஜி.வினய், ஆஷியா மரியம், துணை ஆணையர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.