Last Updated : 19 Nov, 2021 03:08 AM

 

Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி பழங்குடியினருக்கு சித்திரவதை: காவல்துறையினர் மீது புகார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 3 பேரை சித்திரவதை செய்து, குற்ற வழக்கில் சிக்க வைத்திருப்பதாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

அந்த தனிப்படையினர் கடந்த 14-ம் தேதி இரவு சின்னசேலம் தில்லைநகரில் வசித்து வந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிரகாஷ், தர்மராஜ், செல்வம் ஆகிய 3 பேரை திடீரென அழைத்துச் சென்றுள்ளனர். உறவினர்கள் கேட்டபோது காரணம் கூறவும் மறுத்துள்ளனர். தொடர்ந்து 15-ம் தேதி காலை மீண்டும் தில்லை நகருக்குச் சென்று பிரகாஷின் உறவினர்களான சக்திவேல், பரமசிவம் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களின் உறவினர்கள் கடந்த 16-ம்தேதி கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையின் செயல்பாடு குறித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

இப்புகாரைத் தொடர்ந்து காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்ட 5 பேரில், பிரகாஷ். தர்மராஜ் மற்றும் செல்வம் ஆகிய 3 பேரும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனக் கூறி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைத்தனர். சக்திவேல், பரமசிவம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட பரமசிவம் மற்றும் செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் ஆர்.பூமாலை, வி.ராஜா, கே.வேலாயுதம் உள்ளிட்டோரிடம் காவல்துறையினரின் விசாரணை விவரத்தை தெரிவித்துள்ளனர்.

அப்போது காவல்துறையினர் தங்களை கண்களைக் கட்டி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே தங்களை கட்டி வைத்து, சில திருட்டு சம்பவங்களைக் கூறி அவற்றை ஒப்புக் கொள்ளும்படி கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்தனர். மேலும், ஏதேனும் ஒரு நகைக் கடையை கை காட்டினால், அவர்களிடம் நாங்கள் நகைகளை பெற்றுக் கொள்கிறோம் எனக் கூறி கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு இதுபற்றி ஆன்லைன் வழியாக புகார் தெரிவித்துள்ளனர். பழங்குடியினர் கூறும் புகார் குறித்து கள்ளக்குறிச்சிடிஎஸ்பி ராஜலட்சுமியிடம் கேட்டபோது, “தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமின்றி இதர சில மாவட்டங்களின் குற்றச்சம்பவங்களில் தொடர்பிருந்த நிலையில், அவர்கள் சின்ன சேலத்தில் தங்கியிருந்தனர்.

மேலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதற்கான கை ரேகையும் பிடிபட்டவர்களின் கை ரேகையுடன் ஒத்துப்போகிறது. அவர்களே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்களை எந்த சித்திரவதையும் செய்யவில்லை” என்றார். இதற்கிடையே, காவல்துறை மீது புகார்தெரிவித்துள்ளவர்களில் ஒருவரான சக்திவேல், உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று மாலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x