

சென்னையில் மழைநீர் விரைவாக வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிய மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். திரு.வி.க.நகர், ஜவகர் நகர், எஸ்.ஆர்.பி. கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளை அடையாளம் கண்டிருக்கிறோம். அங்கு தேங்கும் மழைநீரை வெளியேற்ற மாற்று வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்கு மாம்பலம் பகுதியில் ரயில்வேயுடன் இணைந்து மழைநீர் தேங்காமல் வழிந்தோட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று புளியந்தோப்பு பகுதியிலும் காந்திநகர் கால்வாயுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் மாற்று வழிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பெருமழை பெய்தாலும் மழைநீர் விரைவில் வடியும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வட சென்னை பகுதியில் மீட்புப் பணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க அதிக எண்ணிக்கையிலான நீர் இறைக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மழைக் காலத்தில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.