

அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.26 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை 2012-ல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது, சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கானாத்தூர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்றை இவர் அளித்துள்ளார்.
அதில், “பிரபல சிமென்ட் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் ரூ.26 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.1.80 லட்சம் வட்டியாக கிடைக்கும் என கூறினர். இதை நம்பி ரூ.25 லட்சத்தை ஆன்லைன் மூலமும், ரூ.1 லட்சத்தை ஈஞ்சம்பாக்கத்தில் வைத்து ரொக்கமாகவும் கொடுத்தேன்.
இது தொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி தருவதாகக் கூறிய பணத்தை அந்நிறுவனம் தரவில்லை. கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.