

தாம்பரம் கிழக்கு பகுதி, ஆனந்தபுரம் ஜெகஜீவன் ராம் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (30). கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது கொண்ட மோகத்தால் வேலைக்குசெல்லாமல் வீட்டில் இருந்தபடியே, மொபைல் போனில் ரம்மி விளையாடி வந்தார். தொடக்கத்தில் ரம்மி விளையாட்டில் ரூ. 1 லட்சம் வரை பணத்தை சம்பாதித்த முருகன் தொடர்ந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி பகல், இரவு பாராமல் ரம்மி விளையாட்டில் மூழ்கினார்.
இந்நிலையில் சமீபத்தில், தன் மனைவி பிரியாவின் நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும் பல லட்சம் வரை சூதாடி தோற்று ஏமாந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த முருகன் நேற்று முன்தினம், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, முருகனின் தாய் நெம்மிலியம்மாள் (53) அளித்த புகாரின்படி சேலையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆன்லைன் விளையாட்டில் ஏறத்தாழ ரூ.20 லட்சம் வரை பணத்தை இழந்த முருகன் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் பல லட்சம் ரூபாய் வரைகடன் வாங்கி அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நச்சரிக்கத் தொடங்கினர்.
இந்தக் கடனை திருப்பி கொடுக்க மேலும், மேலும் கடன் வாங்கி ரூ.20 லட்சம் வரை ரம்மி விளையாட்டில் இழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கடனாளியாக மாறியமுருகன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் தாம்பரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல பேரின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுக்கு தமிழக அரசு நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும் எனபொதுமக்கள் சார்பில்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.