

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் குழப்பமான அறிவிப்பால் கனமழையில் சிக்கிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் நேற்று பெரும் அவதிக் குள்ளாகினர்.
திருப்பத்தூர் உள்ளிட்ட பெரும் பாலான மாவட்டங்களில் நவம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேற்று முன்தினம் மாலையே அறிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று காலை 7 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிடவில்லை.
இதற்கிடையே, காலை 7.30 மணிக்கு மேல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை எனவும் மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவிப்பை வெளியிட்டார். ஆட்சியரின் குழப்பமான அறிவிப்பால் வேறு வழியில்லாமல் மழையில் நனைந்தபடி மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். காலையில் பெய்ய தொடங்கிய மழை, நேரம் செல்ல, செல்ல அதி தீவிரமானது.
ஆட்சியரின் குழப்பமான அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனைத்தொடர்ந்து, நண்பகல் 1 மணிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா விடுமுறை அறிவித்தார். அப்போது மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. இதனால், வீட்டுக்கு திரும்ப முடியாமல் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இருப்பினும், மாணவ, மாணவிகள்கனமழையில் முழுமையாக நனைந்தபடி வீட்டுக்கு திரும்பிய காட்சியை கண்ட பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் தவறான முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறும்போது, ‘‘திருப் பத்தூர் மாவட்டத்துக்கு விடு முறை அறிவிப்பு வெளியா காததால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பினோம். மழை அதிகரித்ததால் நண்பகல் 1 மணிக்கு பிறகு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மாணவர்களை எங்களாலும் பள்ளிக்கு சென்று அழைத்து வர முடியவில்லை. ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றாம் பள்ளி போன்ற பகுதிகளில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் அதிகரித்துள்ளது.
சில இடங்களில் தரைப் பாலத்தை கடந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ் வழியாக வரும் மாணவர்களின் நிலையை ஆட்சியர் ஏன் அக்கறை காட்டவில்லை என தெரியவில்லை.
மழை காலங்களில் பல மாணவர்கள் காய்ச்சல், இருமல், சளியால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆட்சியரின் இப்படி ஒரு முடிவால் மேலும் பலரின் உடல்நிலை பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற செயல்களில் மாவட்ட நிர்வாகம் இனி ஈடு படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உரிய காலத்தில் எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.