

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான போராட்ட வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு ஜாக்டோ- ஜியோ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தமிழகத்தில் 2016, 2017, 2019-ல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் (தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது மாநிலம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பித்தது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த நாட்கள் மற்றும் இடைக்காலப் பணி நீக்க நாட்கள் வேலை நாட்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தமிழக அரசு அக்டோபர் 13-ல் அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் விதிமுறைகளை மீறி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தடைக்குப் பிறகும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால், ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மீதான போராட்ட வழக்குகளை ரத்து செய்வது மற்றும் போராட்ட நாட்களைப் பணிக் காலமாகக் கருதுவது ஆகியவை தொடர்பான அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.
பின்னர் மனு தொடர்பாக ஜாக்டோ- ஜியோ பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.