

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில், “ வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைக் கொண்டுள்ளது. இது மேற்கு. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையை கடக்கும்.
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், டெல்டா மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திரு நெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
வடகடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகள் மணிக்கு 40 முதல் 50 கிமீ திசையில் காற்று வீசும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.