

தமிழகத்தின் அவசரத் தேவைக்காக 4.34 லட்சம் டன் நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் 4,320 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினமும் மின்னுற்பத்திக்கு சுமார் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி. வேலி மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மத்தியஅரசின் கோல்இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து தமிழகத்துக்கு நிலக்கரி ஒதுக்கப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரி, ரயில் மூலம் ஹால்தியா துறைமுகத்துக்கும், ஒடிசா மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரி பாரதீப் துறைமுகத்துக்கும் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலம் தமிழகத்தில் உள்ள எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து அனல்மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது, மழை உள்ளிட்ட காரணங்களால் பல சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அனல்மின் நிலையங்களில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஒடிசாவில் உள்ளபல்ராம், பரத்பூர், ஹின்குலா, அனந்தா, ஜகனாத் ஆகிய சுரங்கங்களில் இருப்பில் உள்ள 4.34 லட்சம்டன் நிலக்கரியை தமிழக மின்வாரியத்துக்கு ஒதுக்கி உள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள நிலக்கரியை கொண்டு வரும் பணியை மின்வாரியம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.