

தமிழகத்தில் 9-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியதடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசிமுகாம்கள் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை 8 முகாம்கள்நடைபெற்றுள்ளன. இவை தவிர வீடுகளுக்குச் சென்று தடுப்பூசிபோடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 73 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 35 சதவீதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவதற்காக இனிமேல் வாரம்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் தெரிவித்தார். அதன்படி, 9-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் தமிழகம்முழுவதும் இன்று நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “பொதுமக்களின் வசதிக்காக, அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே வாரத்தில் 2 நாட்கள் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தயங்காமல் வந்து தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தடுப்பூசி போடாதவர்களுக்கு பாதிப்பு
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கரோனா தொற்றால் 2,011பேர் உயிரிழந்துள்ளனர். அதில்,1,675 பேர் (84 சதவீதம்) கரோனாதடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். தொழில் நுட்பரீதியாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களே அதிகம் இறந்துள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகமாக உள்ளது.
தடுப்பூசிகள் கையிருப்பு
அதனால், அபாயத்தைஉணர்ந்து பொதுமக்கள் விரைவாகதடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அனைவருக்கும் செலுத்தத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே தாமதிக்காமல், தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.