Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM

சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்: தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

சென்னை

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.

மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பும்போது அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தின் ஷிம்லாவில் நேற்று நடந்த மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் அப்பாவு மு.அப்பாவு பேசியதாவது:

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக, மாநிலத்தின் வளர்ச்சி மட்டுமின்றி, சமூக நீதியை உறுதிப்படுத்தும் அமைப்பாக தமிழக சட்டப்பேரவை செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவை என்பது மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். சில மாநிலங்கள், மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றி, சட்டப்பேரவையை ரப்பர் ஸ்டாம்ப் போல் பயன்படுத்துகின்றன. உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் பேரவை இருக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டப்படி வானளாவிய அதிகாரம் மட்டுமின்றி பொறுப்புகளும் உள்ளன. அவரது முடிவே அவையில் இறுதியானது. அவர் சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும். பேரவைக்குள் எழுப்பப்படும் பிரச்சினைகளில் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு, தீர்ப்பு இறுதியானது. அதன்மீது நீதிமன்றங்கள் கேள்வி எழுப்ப முடியாது.

ஆனால், சமீபகாலங்களாக பேரவைத் தலைவரின் முடிவுகளை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு எடுக்கின்றன. பேரவைத் தலைவரின் பொறுப்பு சுதந்திரமானதும், இறையாண்மையை உறுதி செய்வதுமாகும். சட்டப்பேரவையின் செயல்பாடுகள் விதிப்படி வழிநடத்தப்படுகின்றன. எனவே, பேரவைத் தலைவர்களின் முடிவுகளை நீதித்துறை சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்காமல், திருப்பி அனுப்புகின்றனர். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய மசோதாக்களை பல மாதங்கள் இருப்பு வைக்காமல் உடனுக்குடன் அனுப்ப வேண்டும். மாநிலத்தின் செயல் அதிகாரியாக ஆளுநர்களை மத்திய அரசு நியமிக்கிறது. ஆனால், அவர்கள் மசோதாக்களை நிறுத்திவைத்து, மறைமுகமாக பொதுமக்களை ஆட்சி செய்ய முயற்சிக்கின்றனர். எனவே, சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்க வேண்டும். அதற்காக ஆளுநருடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.

அதேபோல், ஒரு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மாநில அரசுகள் அனுப்பினால், அதை அவர் திருப்பி அனுப்பும்போது அதற்கான காரணத்தை தெரிவிப்பதில்லை. குறைந்தபட்ச காரணத்தையாவது தெரிவித்தால்தான், அதை மக்களிடம் தெரியப்படுத்தி, சட்டப்பேரவையில் மறுபரிசீலனைக்கு உட்படுத்த முடியும்.

மேலும், உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வதற்கு பேரவைத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது பிரிவு அதிகாரம் அளிக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவரின் முடிவில் நீதிமன்றம் தலையிடும் நிலை உள்ளது. எனவே, 10-வது பிரிவை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை களைந்து, பேரவைத் தலைவர்களின் அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x