

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அவரை இடமாற்றம் செய்வதற்கு வழக்கறிஞர்கள் அமைப்புகள், மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து, குடியரசுத் தலைவர் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.
இதனால், அவருக்கு உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா நடத்த வழக்கறிஞர்கள் சங்கத்தினர் திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், சஞ்ஜிப் பானர்ஜி பிரிவுஉபச்சார விழாவைப் புறக்கணித்துவிட்டு நேற்று காலையிலேயே குடும்பத்துடன் காரில் கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
செல்லும் முன்பாக சக நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
`சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள என் குடும்பத்துக்கு' எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில், "உங்களிடம் தனிப்பட்ட முறையில் நேரில் வந்து சொல்லாமல் வெகுதூரம் செல்வதற்கு மன்னிப்புக் கோருகிறேன். என்னுடைய நடவடிக்கைகள் யாரையும் புண்படுத்தியிருந்தால், அது தனிப்பட்ட முறையில் நடந்தது அல்ல. அது உயர் நீதிமன்ற நலனுக்கானதாகவே இருக்கும். என் மீது சக நீதிபதிகள் வைத்துள்ள அளவு கடந்த அன்பால் பூரித்துப்போய் இருக்கிறேன்.
நாட்டிலேயே சென்னைஉயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள்தான் சிறப்பானவர்கள். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள எனக்கு பேருதவி புரிந்த உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும், வழக்கறிஞர்கள் அமைப்புகளுக்கும், சக நீதிபதிகளுக்கும், நீதித் துறை ஊழியர்களுக்கும் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது உள்ளதுபோலவே வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நடவடிக்கைகளை உயர் நீதிமன்றத்தில் தொடர வேண்டும். அனைவருக்கும் என் பாராட்டுகள்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "நீதித்துறை ஊழியர்கள் ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும், அதை என்னால் முழுமையாகத் தகர்த்தெறிய முடியவில்லை என்ற வருத்தமும் எனக்கு உள்ளது. இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழகமும் எனதுசொந்த மாநிலம் என கடந்த 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த நிலையில், அந்த மகி்ழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொள்கிறேன்" என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.