

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் பேசியதாவது:
நாட்டிலேயே உயர்கல்வி வழங்குவதில் விஐடி பல்கலைக்கழகம் முன்னோடியாக திகழ்கிறது.
மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியைக் கொண்டு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது உருவாகியுள்ள 4-வதுதொழிற்புரட்சியானது ஏற்கெனவேமனிதனால் உருவாக்கப்பட்டஅனைத்து தொழில்நுட்பங்களையும் ஒட்டுமொத்தமாக மாற்றிவருவதை காண்கிறோம். மாணவர்கள் புதிய மாற்றங்களுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு ஆளுநர் இல.கணேசன் கூறினார்.
பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
உயர்கல்வித் துறையில், வளர்ந்த நாடுகளுடன் இந்தியா போட்டியிட வேண்டும். ஆராய்ச்சிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீட்டுக்கும் அதிக நிதி ஒதுக்க வேண்டும். ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடுவதில் விஐடி முன்னணியில் திகழ்கிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை ஆராய்ச்சிக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
உயர்கல்வியை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும். இதற்கு மத்திய, மாநிலஅரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். தேசிய அளவில் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளது. இதை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். இந்த இலக்கை அடைய வேண்டுமானால் இன்னும் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.
விழாவில், பிஎச்டி, பிடெக், எம்டெக், எம்எஸ், எல்எல்பி (ஆனர்ஸ்) எம்சிஏ உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் 1,848 பேர் பட்டம் பெற்றனர். சிறப்பிடம்பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. விஐடி பல்கலைக்கழக துணை தலைவர்கள் சங்கர்விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணை தலைவர் காதம்பரி விசுவநாதன், துணைவேந்தர் ராம்பாபு கொடாலி, இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் உள்ளிட்டோர் இணையவழியில் பங்கேற்றனர்.