கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசு நிலத்தில் அனுமதியின்றி ரூ.500 கோடி மதிப்பிலான கிராவல் மண் எடுத்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு பதிய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Published on

அரசு நிலத்தில் ரூ.500 கோடி மதிப்புக்கு அனுமதியின்றி கிராவல் மண் எடுத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகாரை ஊழல்கண்காணிப்பு ஆணையகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் உப்பார்பட்டியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து அனுமதியின்றியும், சட்டத்துக்குப் புறம்பாகவும் ரூ.500 கோடி மதிப்பிலான கிராவல் மணலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனதுஆதரவாளர்கள் மூலமாக எடுத்து விற்பனை செய்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிலங்களிலிருந்து கிராவல் மண் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியாருக்குச் சொந்தமானவை என மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

217 பக்க ஆதாரங்களுடன்..

இந்த வழக்கு விசாரணை நீதிபதி வி.பாரதிதாசன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இது தொடர்பாக 217 பக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், இந்த புகார் குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கு விசாரணையை இரு மாதங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in