ஐசிஏஆர் தேர்வில் தேசிய அளவில் 2-ம் இடம்: திண்டுக்கல் மாணவி ஓவியா சாதனை

ஐசிஏஆர் தேர்வில் தேசிய அளவில் 2-ம் இடம்: திண்டுக்கல் மாணவி ஓவியா சாதனை
Updated on
1 min read

ஐ.சி.ஏ.ஆர். தேர்வில் திண்டுக்கல்லைச் சேர்ந்த அ.ஓவியா தேசிய அளவில் 2-ம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஏஆர்) ஆண்டுதோறும் பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவர்) படிப்பு முடித்தவர்கள் மேற்படிப்பான எம்.வி.எஸ்சி.யில் சேர தேசிய அளவில் தேர்வு நடத்துகிறது. இத்தேர்வு செப்.17-ல் நடந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த அ.ஓவியா, தேசிய அளவில் 2-ம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்தார். இவர், திருநெல்வேலியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.வி.எஸ்சி. படித்தவர் ஆவார்.

இதுகுறித்து மாணவி அ.ஓவியா கூறியது: ஐசிஏஆர்தேர்வு எழுதி வெற்றிபெறுவதன் மூலம் கால்நடை டாக்டர் மேற்படிப்புக்கு இந்திய அளவில் உள்ள சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம்.

பி.வி.எஸ்சி. படித்தபோதே பாடங்களை ஆழ்ந்து படித்தேன். ஐசிஏஆர் தேர்வுக்கு விண்ணப்பித்தவுடன் முழுமையாக 2 மாதங்கள் தேர்வுக்குத் தயாரானேன். அடிப்படை புரிதலுடன் படித்ததால் வெற்றிபெற முடிந்தது.

ஏற்கெனவே இத்தேர்வை எழுதி வெற்றிபெற்றவர்கள் எனக்கு வழிகாட்டினர் என்றார். மாணவி ஓவியாவுக்கு தெலங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in