Published : 14 Mar 2016 03:04 PM
Last Updated : 14 Mar 2016 03:04 PM

அதிமுக 234 தொகுதிகளிலும் வென்று எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும்: நாஞ்சில் சம்பத் நம்பிக்கை

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும் என வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

அதிமுக சார்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் பா. நீலகண்டன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி முன்னிலை வகித்தார். அதிமுக முன்னாள் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வர் பதவி மீது 10-க்கும் மேற்பட்டோர் ஆசைப்படுகின்றனர். முதல்வராக தகுதி வேண்டும். யாரை முதல்வர் பதவியில் அமர்த்துவது என மக்கள் முடிவு செய்து விட்டனர்.

அதிமுக அரசின் சாதனைகளைக் கண்டு மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்க மக்கள் தயாராகிவிட்டனர். விஜயகாந்த்தை நம்பியிருந்த கருணாநிதி ஏமாந்து விட்டார். கூட்டணிக்காக குழு அமைத்துள்ளார் கருணாநிதி. அவரது திட்டம் நிறைவேறாது. சொந்த குடும்பத்தையே 2-ஆக உடைத்தவர் கருணாநிதி. அவரை நம்பி, அவருடன் கூட்டணி வைத்திருந்த திருமாவளவனே, இந்த தேர்தலில் வேறு பக்கம் சென்றுவிட்டார்.

எப்படியாவது ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பல கட்சிகளை கூட்டணிக்காக அழைக்கிறார் கருணாநிதி. அவருடன் கூட்டணி வைக்க எந்தக் கட்சியும் விரும்பவில்லை.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கான சலுகைகள், பெண்களுக்கான திருமண உதவித் தொகை உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. அதிமுகவால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற தேமுதிக, இந்த தேர்தலில் தனித்துப் போட்டி எனக்கூறி தற்கொலைக்கு சமமான முடிவை எடுத்துள்ளது பரிதாபக்குரியது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி இல்லாத புதிய அரசை இந்த முறை அதிமுக அமைக்கும். மக்கள் விருப்பபடி இது நடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x