

கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையைக் கடந்து வெள்ளம் பாய்ந்துஓடியதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு மழைநீர் செல்லாத வகையில் நீர்வள ஆதாரத் துறை சார்பில்,சுமார் 300 மீட்டர் தூரம் வரதராஜபுரம் பகுதியில், மணல் மூட்டைகளைக் கொண்டு அடையாறு ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணிநடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணி தொடர்பாக காஞ்சிஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறையினர் கூறியதாவது: அண்மையில் பெய்த மழையில் அடையாறு ஆற்றில் 8.5 அடி மட்டும் செல்லவேண்டிய வெள்ளம் 11 அடிஉயரம் வரையும், விநாடிக்கு 10,000 கன அடி வீதமும் கரைபுரண்டு ஓடியது. அளவுக்கு அதிகமாக வெள்ளம் ஓடியதால் கரையைக் கடந்து குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.
தற்போது அடையாறு ஆற்றைச் சுற்றியுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி விட்டன. மழை தொடருமானால் வரதராஜபுரம் பகுதிகளில், வெள்ளம் குடியிருப்பு பகுதிக்கு செல்லாத வகையில் மணல் மூட்டைகளை கொண்டு கரையை 300 மீட்டர் தூரம்2.5 அடி உயரம் உயர்த்தும் பணிதற்போது நடைபெற்று வருகிறது என்றனர்.