சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
Updated on
1 min read

சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சங்கரும், பழனியைச் சேர்ந்த கவுசல்யாவும் பொள்ளாச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்து வந்துள்ளனர். கவுசல்யாவின் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சங்கர், கவுசல்யாவை திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை13 ஆம் தேதி உடுமலைப்பேட்டை கடைவீதிக்குச் சென்று திரும்பும் வேளையில் துடிக்கத் துடிக்க வெட்டிச் சாய்க்கப்பட்டதில் சங்கர் அதே இடத்தில் துடி துடிக்கப் பலியாகி இருக்கிறார். கவுசல்யா பலத்த காயத்துடன் கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மக்கள் கூட்டம் மிகுந்த கடைவீதியில் பட்டப் பகலில் நடந்த இக்கொடூரச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சாதி ஆணவம் கோர தாண்டவம் ஆடியதில் இன்னொரு தலித் இளைஞர் சங்கர் பலியாகி இருக்கிறார்.

தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், குமரலிங்கம் சங்கர் என்று சாதி வெறி ஆணவக் கொலைக்குப் பலியான தலித் இளைஞர்கள் பட்டியல் வெளி உலகிற்கு தெரிய வந்தவை. இன்னும் வெளிவராத எத்தனையோ இளம் காதலர்கள் கொலைகள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து இருக்கின்றன.

காதல் மணம் புரிந்தோரை வெட்டி வீழ்த்துவதற்கு சாதி வன்மமும், கொலை வெறியும் கைகோர்த்துக்கொண்டு அலைகிறது. இச்செயல்களைக் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு சமூக பொறுப்புணர்ச்சி இன்றி அலட்சியமாக இருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் கொலை வழக்கை ஜெயலலிதா அரசு கையாண்ட விதம், சாதி ஆணவக் கொலைகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் இருந்தது மிகவும் கண்டனத்துக்குரியது ஆகும்.

குமரலிங்கம் சங்கரை வெட்டிக் கொன்ற கூலிப்படையினரையும், ஏவிவிட்டவர்களையும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள இத்தகைய சாதிய வெறியை அறவே அகற்றுவதற்கு முற்போக்குச் சிந்தனையும், துணிவும் கொண்ட வருங்காலத் தலைமுறை உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in