Last Updated : 17 Nov, 2021 06:21 PM

 

Published : 17 Nov 2021 06:21 PM
Last Updated : 17 Nov 2021 06:21 PM

குமரியில் மழை நின்றதால் வெள்ள அபாயம் நீங்கியது: நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் சேவையைத் தொடங்க தண்டவாள சீரமைப்புப் பணி தீவிரம்

குமரி மாவட்டத்தில் மழை நின்றதால் வெள்ள அபாயம் நீங்கியது. நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவையைத் தொடங்குவதற்காகத் தண்டவாளப் பாதையைச் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதியும், 13-ம் தேதியும் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, பொய்கை அணைகளில் இருந்து வெளியேறி உபரிநீர், குளங்களில் ஏற்பட்ட உடைப்பு போன்றவை மாவட்டம் முழுவதும் பரவலாகக் குளம்போல் தண்ணீர் தேங்கி சேதத்தை ஏற்படுத்தியது. மலை கிராமங்கள், மற்றும் நகர, கிராமப்புறச் சாலைகள் அதிகமானவை பழுதாகியும், மண் அரிப்பு ஏற்பட்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை நின்று வெயில் அடித்து வருகிறது. இதனால் வெள்ள அபாயம் நீங்கி இயல்பு வாழ்க்கை தொடங்கியுள்ளது. அதே நேரம் சேதமான விவசாய நிலங்கள், சாலை, ரயில் தண்டவாளங்கள், குளங்கள் உடைப்பு, மண் சரிவு ஆகியவற்றைச் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

குமரி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) மழை இன்றிப் பரவலாக வெயில் அடித்தது. இதனால் சாலையோரம் தேங்கிய தண்ணீர் முழுமையாக வற்றியது. அதே நேரம் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் பாதியளவு வற்றிய நிலையில் தற்போது வழிந்து வருகிறது. தொடர்ந்து மழை இல்லாமல் இருந்தால் இன்னும் 3 நாட்களுக்குள் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் வடிந்துவிடும் சூழல் நிலவுகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 44.37 அடியாக உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 1891 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1757 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 74 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 1899 கன அடி தண்ணீர் வருகிறது. 3192 கன அடி தண்ணீர் உபரியாகச் செல்கிறது. சிற்றாறு அணை அடைக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலை திரும்பி வருவதால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர். மோதிரமலை உட்பட குமரி மலை கிராமங்களில் வெள்ளத்தால் சூழப்பட்ட சாலைகளில் மழைநீர் வடிந்ததால் போக்குவரத்து சீரானது. அதே நேரம் குற்றியாறு, கரும்பாறை உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் நிலை இயல்புக்கு வரவில்லை. நாகர்கோவிலில் இருந்து கேரளா செல்லும் ரயில் பாதைகளில் 6 இடத்திற்கு மேல் மண் சரிவு ஏற்பட்டிருந்தது.

இதைப் போல் நாகர்கோவில் அருகே வில்லுக்குறி இரட்டைகரை சானலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் பேயன்குழி, நுள்ளிவிளை ரயில் தண்டவாளத்தில் புகுந்ததால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தண்டவாளப் பகுதிகள் ஆறுபோல் மாறியிருந்தன. இதனால் நேற்று 5-வது நாளாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் உடைப்பைச் சரிசெய்து தண்ணீர் வடிந்த பின்பு தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தண்டவாளத்தின் அருகே ஜல்லிக் கற்களை நிரப்பி சீரமைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே இன்னும் இரு நாட்களுக்குள் திருவனந்தபுரத்திற்கு ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நாகர்கோவில் நகரப் பகுதிகளிலும் வெள்ளம் தேங்கிய பகுதிகளைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x