

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 68-வது கூட்டுறவு வார விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கரபாண்டியன் (ராணிப்பேட்டை) தலைமை வகித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), கதிர் ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு 1,151 பயனாளிகளுக்கு ரூ.10.01 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
’’ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 306 நிறுவனங்கள் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படுகின்றன. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெற்ற 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் ரூ.617.03 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, நகைக் கடன் ரூ.760.04 கோடி தள்ளுபடி செய்யப்பட உள்ளது. கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் நல்ல திட்டங்கள். அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல குறைகள் உள்ளன. அவை களையப்பட வேண்டும்.
கூட்டுறவுத் துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும். பதவிக்கு வந்த உடனே லாபத்தைப் பார்க்கக் கூடாது. கூட்டுறவுத் துறையில் நடைபெறும் முறைகேடுகளை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும். கூட்டுறவுத் துறையில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் போலி நகைகளை வைத்தும், போலி ஆவணங்களைத் தயாரித்தும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
கூட்டுறவுத் துறையால் பல நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. கூட்டுறவுத் துறையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்களை நேர்மையாகத் திருப்பிச் செலுத்தி வருகின்றனர். இதேபோல, அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்துள்ளது. இந்த மழையால் பெரும்பாலான ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால், தமிழகத்தில் சேதாரம் அதிகரித்துக் காணப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர் சேதமாகியுள்ளது. அதேபோல, வாழை, பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பயிர்களும் சேதமாகியுள்ளன.
நீர்நிலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும். வேலூர் மாவட்டம், அகரம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.’’
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.