

பல ஏழைகளிடம் மஞ்சள் ரேஷன் கார்டு உள்ளதால் சிவப்பு அட்டைதாரர்களுக்குத் தருவது போல் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் தர வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:
''என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 6 மாதமாகிவிட்டது. மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் வரவில்லை. புதுவையில் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதமாகப் பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிரம்பி நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. ஆனால், முதல்வர் ரங்கசாமி எந்தப் பகுதிக்கும் செல்லாமல் வீட்டின் அருகில் உள்ள ஊசுட்டேரியை மட்டும் பார்த்துள்ளார். தீபாவளி முடிந்து பல நாட்களாகியும் தீபாவளி அறிவிப்புகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
மழை நிவாரணமாக சிவப்பு ரேஷன் கார்டுக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார். பல ஏழைகள் மஞ்சள் கார்டு வைத்துள்ளனர். எனவே மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்க வேண்டும். இந்த நிவாரணத் தொகை எப்போது வழங்கப்படும் எனத் தெரிவிக்க வேண்டும்.
ரொட்டி, பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவித்தும் பொதுப்பணித்துறை அமல்படுத்தவில்லை. முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம் பட்ஜெட்டில் வராதது. இதற்கான நிதியை எப்படி அவர் பெறுவார்? பல தொழிற்சாலைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ள சிறார்களைக் கண்டறிந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் சேதமான அனைத்துச் சாலைகளையும் அரசு சீரமைக்க வேண்டும்”.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.