Last Updated : 17 Nov, 2021 04:32 PM

 

Published : 17 Nov 2021 04:32 PM
Last Updated : 17 Nov 2021 04:32 PM

தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்த இழப்பீட்டுத் தொகையை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அண்ணாமலை

மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்த இழப்பீடு தொகையை விவசாயிகள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமான பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் தோவாளையில் உடைப்பு ஏற்பட்ட பெரியகுளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி, மற்றும் இடிந்த வீட்டை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் திருப்பதிசாரம், வேம்பனூர், மணவாளகுறிச்சி, குன்னக்காடு பெரியகுளம், காப்புக்காடு, அதங்கோடு, வைக்கலூர், காஞ்சாம்புறம் போன்ற மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார்.

அப்போது அண்ணாமலை பேசியதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் 1992ம் ஆண்டிற்கு பிறகு இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மழைநீர் சேதத்தால் குமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண பொருட்கள் பாஜக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீரில் மூழ்கிய விவசாய பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் தருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அப்படியானால் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.8000 தான் கிடைக்கும். ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது ஏக்கர் ஒன்றிற்கே ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவர் முதலமைச்சர் ஆனதும் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம வழங்குவது எவ்விதத்தில் நியாயம். இந்த குறைந்த இழப்பீட்டு தொகையை விவசாயிகள் ஏற்றுகொள்ள மாட்டார்கள்.

குமரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

இந்நிலையில் தான் விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் பாரதீய ஜனதா களத்தில் இறங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்கள் பணியில் உள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறப்புநிதி ஒதுக்கவேண்டும். சிறப்பு நிதி மூலமே குமரியில் பாதிக்கப்பட்டுள்ள பெரும் சேதங்களை சீரமைக்க முடியும். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் வெள்ளிக்கிழமை 11 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சுகாதாரத்தறை அமைச்சர் சுப்பிரமணியம் எதற்காக ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறிவருகிறார். இதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

சென்னையில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் வாய்க்கால்களை தூர்வாரி இருக்கவேண்டும். இவற்றி்ல 600 கிலோ மீட்டர் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளது. இதிலிருந்து திமுக அரசின் இயலாமை தெரிகிறது. குமரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வயலுக்குள் இறங்கி கள பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வு செய்ய வரும் இடத்தில் அந்த பகுதியின் சேதத்தை இறங்கி பார்க்க வேண்டும். அடித்தட்டு மக்களை சென்று பார்க்கவேண்டும். ஆனால் ஆய்வு கூட்டம் மட்டும் நடத்தி சென்றால் ஏக்கருக்கு ரூ.8000 தான் வழங்கமுடியும்” என்றார்.

ஆய்வின்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், பாஜக குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, நயினார்நாகேந்திரன், மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x